0

கைவல்யம்


அதிகாலையில்
எழுந்திருக்க வேண்டுமென்றுதான்
அலாரம் வைத்தேன்
மனம்
எழுந்து என்ன சாதிக்கப் போகிறாம்
என்றது
கண் அசந்தேன்
விழித்த போது மணி ஆறு
முன்னமே எழுந்திருக்கலாமோ
என மனம் வருந்தியது
மனமே நொடிக்கு ஒரு தடவை
நிலை மாற்றி என்னை
அவஸ்தைபட வைப்பதில்
உனக்கு என்ன சுகமோ
இதோ கிளம்பியாச்சி
முதலில் கோவில்
பிறகு அலுவலகம்
எதிரில் ரகுவா
பேச்சிலேயே நாத்திகனாக
மாற்றி விடுவானே
சிறுநீர் கழிப்பது போல்
வேலி பக்கம் ஒதுங்கி
தப்பித்தேன்
இதே வேலையில்
ரொம்ப நாள்
குப்பை கொட்ட முடியும்
என்று தோன்றவில்லை
இளமை கொடுத்த சிறகை
முதுமை பறித்துவிட்டது
வியாதியின் கூடாரம் தானே
இந்த உடல்
மருந்தகத்திலும் கணக்கு உண்டு
மளிகை கடையிலும் கணக்கு உண்டு
உருப்படியா வேலை செய்ய
உடல் ஒத்துழைக்கவில்லை
ஒண்ணாம் தேதிக்காக
வேலை செய்வது
சுமையாக இருக்கிறது
சித்திரகுப்தன் எனது
கோப்புகளை எடுத்துப்பார்த்தால்
சிரிப்பான்
இத்தனை சிலுவைகளை
இவன் ஒருவனே
சுமக்கிறானே என்று.

0

விலை


உங்களுக்குத் தெரியுமா
கண்களுக்குத் தெரியாமல்
வேறொரு உலகம் இங்கு
இயங்கி வருவதை
உலகை வெற்றி கொள்ள
அலைந்தவர்களெல்லாம்
விதியிடம் தோற்றதை
எல்லா புரட்சியிலும்
இறந்தவர்களின் எண்ணிக்கை
எவ்வளவு என்பதை
ஒரு நாட்டின்
இறையாண்மைக்காக
இரண்டரை லட்சம் பேர்
பலியானதை
வல்லரசாகும் பேராசையில்
பழங்குடியினர் புறக்கணிக்கப்படுவதை
கன்னிமை தொலைத்த பெண்கள்
கண்ணகியாவதை
மேலை நாட்டு
மொழியின் ஆதிக்கத்தால்
தமிழ் மெல்ல மெல்ல
செத்துக் கொண்டிருப்பதை
வக்கற்ற ஜனங்கள்
ஓட்டுப் போடுவதோடு
தங்கள் ஜனநாயகக் கடமை
முடிந்துவிட்டதாக எண்ணுவதை.

0

உன்னிடம் எப்படிச் சொல்வது

கண்ணை மூடிக்கொண்டால்
உலகம் இல்லாமல் போய்விடுமா
தூர் வாரப்படும் கிணற்றிலிருந்து
எடுக்கப்படும் பொருட்களைக் காண
உனக்கு ஆவலாய் இருக்காதா
புள்ளிகள் மட்டுமே
அழகிய கோலமாகிவிடுமா
வானம் எழுதும்
ஓவியக் கவிதை தானே
வானவில்
காற்று நிரப்பப்பட்ட
பலூன்களைக் கண்டால்
குழந்தைமை உடைந்து
வெளிவருவதில்லையா
கருணை இல்லங்களுக்கு
உதவிடும் போது
நமது இறைமை கொஞ்சமாவது
வெளிப்படுவதில்லையா
ஒரு குழந்தை வந்து
உன்னை அம்மா என்றழைத்தால்
உனக்கு கோபிக்கத் தோன்றுமா
மிக அரிதாகவே
ஜோக்குகள் சொல்கிறேன்
சிரிக்க மாட்டாயா.

0

மோகினி


தடித்த வார்த்தைகளுக்கு
பிறகு பரிமாறப்பட்ட தேநீர்
கசந்தது
கூண்டுப் புலியை
வெளியே திறந்துவிடுவது போல்
தன் இணையை சாகடித்தவனை
அரவம் துரத்துவது போல்
கோபமும்,காமமும்
கூரிய வாளைப் போன்று
உறையில் தயாராய் இருக்கிறது
ஆணவம் தான்
இன்னொருவரின் சிறகை
முறிக்கிறது
கோபத்தால்
குடுவையிலுள்ள அமிலம் போன்று
இரத்தம் கொதிக்கிறது
காமம்
யாரை வலைக்குள் வீழ்த்தலாமென்று
தன் பிளவுண்ட நாக்கை
வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்
பணம் கொண்டு வந்தால் தான்
படுக்கையறையில் அனுமதி என்று
மனைவி முகம் சுளிக்கும் போது
பாரதம் பரத்தையர் தேசம் ஆகிவிட்டதா
என்று தோன்றுகிறது
கோயில் கோபுரத்திலுள்ள
நிர்வாணச் சிலைகள்
என்னைப் போன்றவர்கள்
பார்த்து ரசிக்கத்தான்.