0
வீதியில் கண் பதித்தேன்
சூன்யத்தில் நிலை கொண்டது மனது
கடந்த காலத்தில்
செய்த தவறுகள்
அகஸ்மாத்தாக நினைவுக்கு வந்தது
மேஜையில் புத்தகங்கள் கிடந்தன
கண்கள் வாசலை நோக்கியபடியே
இருந்தது
நாய் நரகலைத் தின்றோடியது
மரங்கள் அசைவற்று நின்றன
இளமையில் எத்தனை கோடி இன்பங்களோ
முதுமையில் அத்தனை துயரங்கள்
சுடலை சொல்லிவிட்டுச் சென்றான்
நான் இறக்கின்ற தேதியை
சங்கரன் மாயை என்றான்
புத்தன் ஆத்மா இல்லை என்றான்
சூரல் நாற்காலியில் சாய்ந்து
கண் மூடும் போது
கேள்விகள் அம்பென தைக்கின்றது
விருப்பப்பட்டா பிறக்க வைக்கின்றான்
பொம்மை போல் ஆட்டுவிக்கின்றானே
தான்தோன்றியாக பிறந்தவனுக்கு
பந்த பாசம் புரியுமா
வாழ்வின் விளிம்பில்
நின்று கொண்டு
கருடபுராணம் படித்துக் கொண்டிருக்கிறேன்
இல்லாமல் போவோம்
என்று தெரியும் போது
இருப்பது துயரத்தைத் தருகிறது
இடுகாட்டில் என் சவத்துக்கு
தீ மூடி பேயாட்டம் ஆடுவான்
சுடலை
பிச்சைக்காரன் என்றாலும்
பேரரசன் என்றாலும்
எவனையும் அவன் விடலை.
28 ஆகஸ்ட் 2012
லேபிள்கள்:
சடலம்
0
மோட்ச தேவதைகளுடன்
கடவுள் பேசிக்கொண்டிருந்தார்
தமது குமாரரர்கள் மீது
மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்
ஏதேன் தோட்டத்தில்
ஆதாமுக்கும், ஏவாளுக்கும்
எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை அவர்
ஒரேயொரு வேண்டுகோள் வைத்தார்
தோட்டத்திலொரு மரத்தில்
காய்க்கும் பழங்களை
புசிக்காதீர்கள் என்பது தான் அது
இருவருக்கும் மூன்று வேளை
உணவு கிடைக்கச்செய்தார்
தான் உருவாக்கப் போகும்
கடவுளர் பூமியைப் பற்றி
கனவு பல கொண்டிருந்தார்
மனுஷகுமாரரர்கள் சொர்க்கத்தில்
என்றென்றுமாய் நிலைத்திருப்பர்
என்று நினைத்திருந்தார்
காலன் கால் பதிக்காத இடம் இது
என்று பெருமிதம் கொண்டார்
கடவுளின் சந்தோஷம்
சில காலம் கூட நீடிக்கவில்லை
ஆதாம் அறிவுப்பழம் உண்டதால்
சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்
அந்த துன்பியல் சம்பவத்தை எண்ணி
சுவர்க்கத்தில் கடவுள் சிந்திய
கண்ணீர்த் துளி
பூமியில் மழையாகப் பெய்தது.
11 ஆகஸ்ட் 2012
லேபிள்கள்:
இலை
